நடுரோட்டில் பிளஸ்-2 மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து

ஒருதலைக்காதலால் நடுரோட்டில் பிளஸ்-2 மாணவியை வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

Update: 2022-04-29 19:58 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி குன்னூரிலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரை கீழ் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி அப்பாஸ் என்பவரின் மகன் ஆசிக் (26) ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இவரது காதலை பள்ளி மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணவி தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மாணவியை பின்தொடர்ந்த ஆசிக் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக குத்தினார்.

பொதுமக்கள் சுற்றி வளைத்தனர்

இதனால் மாணவி ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் அவரை அங்குள்ள மின்கம்பத்தில் கயிறு கொண்டு கட்டி வைத்தனர்.

இதையடுத்து இதுபற்றி பொதுமக்கள் குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் கைது

இதையடுத்து மாணவியை கத்தியால் குத்திய ஆசிக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை குன்னூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு, ஆசிக்கை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்