தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்....!

தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-28 08:15 GMT
தேனி,

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மலைக்கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அவர்களை வனப்பகுதியை விட்டு வெளியேற்ற ஐகோர்ட்டு உத்தரவுப்படி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கருதி இந்த தீர்ப்பை எதிர்த்தும், மலைப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடை செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மலை மாடுகளுடன் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மலை மாடுகளுடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் நோக்கி இன்று காலை புறப்பட்டனர். கடமலைக்குண்டு, வீரபாண்டி, வடுகபட்டி உள்பட பல இடங்களில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மாடுகளுடன் போராட்டத்திற்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். 

இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து மாடுகளை சில விவசாயிகள் திருப்பி அழைத்துச் சென்றனர். மற்ற விவசாயிகள் வாகனங்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர், கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். 

மாவட்டம் முழுவதும் இருந்து மலை மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் மற்றும் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மலைக் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். 2 மணி நேரத்துக்கும் மேல் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்