எழும்பூர்: ரெயில் - நடைமேடைக்கு இடையே விழுந்த பயணி - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரெயில்வே பெண் போலீஸ்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் - நடைமேடைக்கு இடையே விழுந்த நபரை துரிதமாக செயல்பட்ட ரெயில்வே பெண் போலீஸ் காப்பாற்றினார்.
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் நிலைதடுமாறி இடையே விழுந்த பயணி ஒருவரை அங்கிருந்த ரெயில்வே பெண் போலீஸ் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து திருச்சி செல்லக்கூடிய ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அப்போது அந்த ரெயில் கிளம்பிய போது ரெயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிக்கினார்.
அப்போது அங்கு பணியிலிருந்த ரெயில்வே பெண் போலீசார் மாதுரி, சுதாரித்துக் கொண்டு துணிச்சலாக சிக்கிய நபரை ஒற்றைக் கையால் இழுத்து அவரை காப்பாற்றினார். ரெயில்வே பெண் போலீசாரின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.