அறந்தாங்கி: தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை - 100 சவரன் நகை, பணம் கொள்ளை

அறந்தாங்கியில் தொழிலதிபரின் கழுத்தை அறுத்து வீட்டில் இருந்த 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-25 01:56 GMT
 அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினம் அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். இவர் ஆப்டிகல்ஸ் கடை (கண் கண்ணாடி கடை), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பேபி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. மகள் திருமணமாகி தனியாக உள்ளார். மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிகல்ஸ் கடையை நிர்வகித்து வருகின்றனர். கணவன் - மனைவி இருவர் மட்டுமே ஆவுடையார்பட்டினத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிஜாம் வீட்டின் முன் நின்று செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டின் உள்ளே குதித்த 3 மர்மநபர்கள் நிஜாமின் கழுத்தை அறுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நிஜாம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.  

பின்னர் வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் நிஜாமின் மனைவி ஆயிஷா பேபியிடம் கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், ஆயிஷா பேபியை கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து பீரோ சாவியை பறித்து பீரோவில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த நிஜாமின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் கொலை, கொள்ளை நடந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யும் சம்பவம் நடந்த வீட்டிற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

தொழில் போட்டி காரணமாக தொழில் அதிபர் நிஜாம் கொல்லப்பட்டாரா? அல்லது கொள்ளை சம்பவத்தின்போது கொல்லப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபரை கொலை செய்துவிட்டு 100 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  
அறந்தாங்கியில் தொழிலதிபரின் கழுத்தை அறுத்து வீட்டில் இருந்த 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்