கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் இன்றும் விசாரணை
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்றும் (வெள்ளிக்கிழமை) விசாரணை தொடருகிறது.
சென்னை,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. கோடைகாலத்தின்போது இங்கு ஜெயலலிதா சிறிது நாட்கள் ஓய்வெடுத்து செல்வது வழக்கம். அவரது மறைவுக்கு பின்னர் கோடநாடு எஸ்டேட் மர்ம தேசம் போன்று ஆனது.
கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கடந்த 24.4.2017 அன்று கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். எஸ்டேட்டில் இருந்து ஜெயலலிதா வைத்திருந்த விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை போயின.
இந்த கொலை-கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேர் கோத்தகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலத்தில் நடந்த சாலைவிபத்தில் கடந்த 28.4.2017-ம் ஆண்டு பலியானார்.
கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் நடவடிக்கையாக விசாரணை தீவிரப்பட்டு உள்ளது.
மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில், ஐ.ஜி. சுதாகர், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆசிஸ்ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி உள்பட 8 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று காலை 10.55 மணிக்கு சசிகலா தங்கி உள்ள இல்லத்துக்கு வருகை தந்தனர். அவர்கள் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலாவின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக ஐ.ஜி.சுதாகர் ‘லேப்-டாப்’ உள்பட நவீன மின்னணு சாதனங்கள் அடங்கிய பையும் கையில் எடுத்து வந்திருந்தார். காலை 11 மணிக்கு சசிகலாவிடம் கோடநாடு கொலை-கொள்ளை தொடர்பாக விசாரணை தொடங்கியது. சசிகலாவிடம் மாலை 5.20 மணியளவில் விசாரணை முடிந்தது.
கோடநாடு விவகாரத்தில் தொடர்ந்து நிகழ்ந்த மரணங்கள், விபத்துகள், தற்கொலை குறித்தும் வெவ்வேறு கோணங் களில் சசிகலாவிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவை மிஞ்சும் மர்மங்கள் நிறைந்த பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணையை நெருங்கி உள்ளதால் சசிகலாவிடம் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
சசிகலாவிடம் நேற்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய வேளையில் அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் கூடினர். இதையடுத்து அவரது வீட்டின் முன்பு தியாகராயர்நகர் உதவி கமிஷனர் பாரதிராஜா, பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.