தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்தடை - பொதுமக்கள் அவதி...!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-04-21 03:30 GMT
சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையே மின் தடைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்களிடையே இத்தகைய மின்தடை பிரச்னை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

இந்நிலையில் திருவண்ணாமலை, கன்னியாகுமரி,கடலூர்,திருச்சி, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நேற்று இரவு 8 மணியில் இருந்து மின்தடை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

அந்த வகையில் கடலூரில் மாவட்டத்தில் அதிகபடியாக 4 மணி நேரம் மின்தடைஏற்பட்டது. கோடை காலத்தில் இதுபோன்ற மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. சமூக வலைதளமான ட்விட்டரில் மின்தடை குறித்து டிரெண்ட் ஆனது. 

இந்த நிலையில் மின்தடை தொடர்பாக  தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து உள்ளார்.

அதில், இன்றிரவு (நேற்று) மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகா வாட் திடீரென தடைபட்டது.  இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க 
நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.   

இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.






மேலும் செய்திகள்