சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: ஓம் சக்தி, மகா சக்தி என பக்தி கோஷத்தோடு தேரை இழுத்த பக்தர்கள்
சமயபுரம் மாரியம்மன் கோவில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.;
சமயபுரம்:
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில்,ஒவ்வொருஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானைவாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகள் ஒலிக்க திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 11.35 மணிக்கு நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி, மகா சக்தி என்று பக்தி கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவே சமயபுரத்தில் குவிந்தனர்.
தொடர்ந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை உடுத்தி, கடும் விரதமிருந்து பாதயாத்திரையாகவும் வந்த பக்தர்கள் அங்குள்ள தெப்ப குளத்தில் நீராடி அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால் தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.