இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு விடை இல்லை - ஓ.பன்னீர் செல்வம்

இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.;

Update:2022-04-19 14:18 IST
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது, தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் முதல்-அமைச்சர் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதற்கு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் பதில் அளித்து இருக்கிறார். அவருடைய பதில் அறிக்கையை பார்க்கும்போது, இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இந்தி மொழி குறித்த மத்திய உள்துறை அமைச்சரின் கருத்திற்கு தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தனது நிலைபாட்டினை உறுதிபட முதல்-அமைச்சர் தெரிவித்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலைப்பாடு ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும்.

இந்தி மொழி குறித்த உள்துறை அமைச்சரின் கருத்து குறித்து ‘ஒன்றுமே தெரியாது’ என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகவும், அதனை நான் கண்டித்து இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறி இருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்து முதலில் அவருக்கு தெரியாததால் ‘ஒன்றுமே தெரியாது’ என்று கூறினார். பின்னர், அதற்கு மறுநாளே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் அறிக்கை வெளியிட்டு விட்டதால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. காரணம், பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அ.தி.மு.க. நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது. எனவே, ஒரேநிலைப்பாடு தான்.

தமிழுக்காக தி.மு.க. அரசு செய்த சாதனைகளை அமைச்சர் பட்டியலிட்டு இருக்கிறார். இதுபோன்ற சாதனைகள் எல்லா ஆட்சிக் காலத்திலும் நடைபெறுகின்ற இயல்பான ஒன்று தான்.

தமிழ் வளர்ச்சித் துறை இலாக்காவை தன் வசம் வைத்துக் கொண்டு இவற்றைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல், அம்மா பாசறையில் பாடம் பயின்ற என்னை, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவி வகித்த என்னை, தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை பத்தாண்டுகள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பித்த என்னைப் பார்த்து முன்னதாகவே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் நான் அறிக்கைவிடுத்தேன் என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் தவிர்த்து ஏனைய நூல்கள் இந்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார் அமைச்சர். தமிழ் இலக்கிய நூல்களை இந்தி மொழியிலோ அல்லது பிற மொழிகளிலோ மொழி பெயர்ப்பதன் மூலம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த மொழியாம் தமிழ் மொழியைபடிக்க வேண்டும் என்றஆர்வம் பிற மொழிகளைப் பேசுபவர்கள் மத்தியில் எழும். இது தமிழ் வளர்ச்சிக்கானது.

அதேசமயத்தில், முதல்-அமைச்சர் விதி 110-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் படிக்கப்பட்ட அறிவிப்புகளை இந்தியில் மொழி பெயர்த்து அதனை தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடுவதன்மூலம் தமிழ் மொழிகற்கும் ஆர்வம் பிற மொழிகளைப் பேசும் மக்களுக்கு ஏற்படாது. இது தன்னலத்திற்கானது.

எது எப்படியோ, ‘நுணலும் தன் வாயால் கெடும்‘ என்ற பழமொழிக்கேற்ப, இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை மறை முகமாக ஒத்துக் கொண்ட அமைச்சர் அவர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்