சென்னையில் நடைபெறும் சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற பஸ் தடுத்து நிறுத்தம்..!
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற இருந்த சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பங்கேற்க சென்ற பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
விழுப்புரம்:
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு பெருந்திறல் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 129 அரசு பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் என 75 க்கு மேற்பட்டோர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க வானூர் ஒன்றிய தலைவர் தீனவெண்மதி தலைமையில் இன்று அதிகாலை புறப்பட்டனர்.
இது போலீசாருக்கு தெரியவரவே, ஆரோவில் போலீசார் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பஸ்சை புறப்பட விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது சத்துணவு ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொழுது அவருடைய போராட்டம் பல நாட்கள் நீடிக்கக் கூடும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் அரசுப்பள்ளிகளில் உணவு சமைக்கும் பணி தடைபட்டு மாணவர்கள் பாதிக்கக்கூடும். என்ற கோணத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டிலிருந்து புறப்பட்ட பஸ்சில் 30க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் மற்ற ஊழியர்கள் வானூர், தைலாபுரம், கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் காத்திருந்தனர்.
ஆனால் போலீசார் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பஸ்சை சிறை பிடித்த தகவல் மற்ற சத்துணவு ஊழியர்களுக்கு தெரியவரவே அனைவரும் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு குவிந்தததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.