மக்கள் கொண்டாடும் படமாக மாமனிதன் இருக்கும்

மக்கள் கொண்டாடும் படமாக மாமனிதன் இருக்கும் என்று இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.;

Update:2022-04-16 23:55 IST
மக்கள் கொண்டாடும் படமாக மாமனிதன் இருக்கும் என்று இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.
இசை வெளியீட்டு விழா
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நடந்தது. யுவன்சங்கர்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். படத்தில் முதன்-முதலாக இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
விழாவில் மாமனிதன் படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்கள் வெளியிடப்பட்டது. இதனை நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரைப்படக்குழுவினர் வெளியிட்டனர்.
மே 20-ந் தேதி வெளியாகும்
விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில், இந்த படம் 37 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது. இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து இந்த படம் உருவாக முழுகாரணமாக இருந்தனர். இந்த படம் பல்வேறு பிரச்சினைகளை கடந்து பலரின் முயற்சியால் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திரைப்படத்தை ஜீவா இளையராஜாவுக்கு சமர்ப்பிக்கிறேன். உலகம் கொண்டாடும் யுவன் சங்கர் ராஜாவை இவ்வுலகிற்கு கொடுத்துள்ளார். என்றார்.
நடிகரும், ஸ்டூடியோ-9 ஆர்.கே. சுரேஷ் பேசுகையில், இந்த படம் அடுத்த மாதம் (மே) 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ஓய்.எஸ்.ஆர். தயாரிப்பில் மாமனிதன் திரைப்படம் வெளியாகுமா? என்று சந்தேகம் இருந்தது. தற்போது பல சோதனைகளை கடந்து படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை தயாரித்ததால் தான் நானும், எனது அப்பாவும் (இளையராஜா) இணைந்து இசையமைக்க முடிந்தது. இந்த நாள் என் வாழ்நாளில் மறக்கமுடியாது என்றார்.
மக்கள் கொண்டாடும் படம்
விழாவின் முடிவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், புதுச்சேரிக்கு பலரும் தங்களின் இளைமை காலத்தை கொண்டாட வந்ததாக கூறினர். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மாமனிதன் திரைப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் கொண்டாடும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமியால் தான் எடுக்க முடியும் என்றார்.
இந்த படத்தின் புதுச்சேரி-கடலூர் பகுதி வினியோகஸ்தராக யுவர் பேக்கர்ஸ் உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை யுவர் பேக்கர்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணராஜ், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்