சென்னை அரசு டாக்டரின் நகையை திருடிய மும்பை பெண் கைது - சிகரெட், மதுபானம் கேட்டு போலீசாரிடம் பிடிவாதம்

சென்னை ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அரசு டாக்டரிடம் நகை திருடிய மும்பை பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-04-16 16:26 GMT
சென்னை:

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன்பு டாக்டர்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி வைத்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் ஒருவர் கழற்றி வைத்திருந்த 2 பவுன் நகை திருட்டு போனது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றிருந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், கீழ்ப்பாக்கம் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆஸ்பத்திரி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, மாடல் உடையில் இருந்த பெண் கைவரிசை காட்டியது கண்டறியப்பட்டது. 

இந்த நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மாடல் உடை அணிந்த பெண் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரிக்கும் போது இந்தி மொழியில் மட்டும் பேசினார்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு மாடல் உடை அணிந்த பெண் ஒருவர்தான் கீழ்ப்பாக்கம் அரசு பெண் டாக்டரின் நகையை திருடியது போலீசாருக்கு நினைவுக்கு வந்தது. 

பின்னர் விசாரணையில் இவர் தான் கடந்த ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டரிடன் நகையை திருடியவர் என்பதும், எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர்களின் நகைகளை அபேஸ் செய்ய நோட்டமிட்டு கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர், மும்பையை சேர்ந்த ஆர்த்திதேவ்நானி (வயது 36) என்பதும், தற்போது வடபழனியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. 

இதையடுத்து அவரை அந்த லாட்ஜிக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். லாட்ஜ் அறையில் ரூ.25 ஆயிரம் பணம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாட்ஜ் அறையில் சிகரெட் துகள்களும், காலி மதுபான பாட்டில்களும் அதிகம் இருந்தது. 

இந்த நிலையில் அவர், போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் சிகரெட், மதுபானம் கேட்டு தொடர்ந்து அடம்பிடித்தார். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில் இவர், மும்பையில் இருந்து விமானம் மூலம் வந்து கைவரிசை காட்டிவிட்டு உடனடியாக மும்பை புறப்பட்டு செல்வதை வழக்கமாக வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போதுதான் இவர் எங்கெங்கல்லாம் கைவரிசை காட்டி இருக்கிறார் என்ற முழு விவரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்