அரசியல் காரணத்துக்காக கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு தி.மு.க. மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

அரசியல் காரணத்துக்காக தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர் என்று தி.மு.க. மீது அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2022-04-15 04:50 IST
சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தில் ‘மாற்றத்தை விதைத்தவன்’ எனும் தலைப்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய நூல் வெளியீட்டு விழா நடந்தது.

விழாவிற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.வினர் மீது தாக்குதல்

தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாளை பா.ஜ.க. நிர்வாகிகள் - தொண்டர்கள் கொண்டாடி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை அம்பேத்கர் பெயரை வைத்து ஒரு சில கட்சிகள் அரசியல் செய்து வருகிறார்கள். சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க நடந்த நிகழ்ச்சியில் தவறான வழிகாட்டுதலின்பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் பா.ஜ.க. தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்முறைக்கு வன்முறை தீர்வு அல்ல.

தேநீர் விருந்து புறக்கணிப்பு

கட்சியை தாண்டி கவர்னர், தமிழக மக்கள் பிரதிநிதியாக இருக்கிறார். கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைப்பது ஒரு மரபு. இதே கவர்னர், கடந்த முறை சட்டமன்ற கூட்டம் கூடியபோது தி.மு.க. அச்சடித்து கொடுத்ததை அப்படியே படித்தார். அவர் மாண்புக்காக அப்படியே படித்தார். அனைத்தையும் அரசியலாக செய்ய வேண்டும் என்று தி.மு.க. கிளம்பியுள்ளது.

மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கான முதல்-அமைச்சர் தானே தவிர, தி.மு.க. உறுப்பினர்களுக்கான முதல்-அமைச்சர் அல்ல. முதல்-அமைச்சர் என்ற அடிப்படையில்தான் கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார். அப்படியிருக்கும்போது, அந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் வந்திருக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய கடமை.

அரசியல் காரணம்

கவர்னர் 11 மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை கூறியுள்ளார். தமிழக அரசு அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதை ஏன் வெளியிட மறுத்து வருகிறார்கள். அரசியல் காரணத்துக்காக தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும் தமிழக அரசு புறக்கணித்ததால் ஒன்றும் நடந்துவிட போவதில்லை. இதனால் கவர்னருக்கு டீ செலவு தான் மிச்சம்.

இந்த விருந்து மக்கள் வரிப்பணத்தில் நடக்கிறது. அது மிச்சமாகி இருக்கிறது. எல்லாம் நல்லத்துக்குதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்