தொடர் விடுமுறை; ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு உயர்ந்த கட்டணம்- பயணிகள் அதிர்ச்சி
படுக்கை வசதிகளுடன் கூடிய ஏசி பேருந்துகளில் ரூபாய் 3500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது
சென்னை,
சித்திரை விஷு தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருகின்றன. இடையில் வரும் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனால், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளதால், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்குகிறது.
சொகுசு, விரைவான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடி செல்வது வழக்கம். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ஆம்னி பேருந்துகள் அதிகம் நாடி செல்கின்றனர். இந்த நிலையில், தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி பேருந்துகளில் பேருந்து கட்டணம் மும்மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி , தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி போன்ற நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்தில் டிக்கெட் ரூபாய் 3000 வரையும் அதேபோல செமி ஸ்லீப்பர் ஏசி பஸ்ஸில் 2500 வரையும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது
படுக்கை வசதிகளுடன் கூடிய ஏசி பேருந்துகளில் ரூபாய் 3500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது சாதாரண குளிர்சாதன வசதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் 2000 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.