கோத்தகிரி: சாலையில் உலாவரும் காட்டு எருமைகள் - பொதுமக்கள் பீதி

கோத்தகிரி நகருக்குள் தொடர்ந்து காட்டெருமைகள் உலாவந்த வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2022-04-13 07:39 GMT
கோத்தகிரி:

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கோத்தகிரி பஸ் நிலையத்திலிருந்து மார்க்கெட் திடல் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் காட்டெருமைகள் கும்பலாக உலா வந்த வண்ணம் உள்ளன.

நேற்று இந்த பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து செல்லும் நேரத்தில் காட்டெருமைகள் கும்பலாக சாலையில் உலா வந்ததால் அவர்கள் அச்சமடைந்து மீண்டும் தங்களது பள்ளி வளாகத்திற்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொண்டனர். 

சாலையின் குறுக்கே காட்டெருமைகள் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்ததால் அந்தப் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காட்டெருமைகள் அங்கிருந்து சென்ற பின்னரே அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், சாலைகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் தொடர்ந்து காட்டெருமைகள் நடமாடி வருவதால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதுடன், அவற்றால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் காட்டெருமைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்