எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பதவிக்காலம் நீட்டிப்பு

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பதவிக்காலம் நீட்டிப்பு.

Update: 2022-04-11 18:53 GMT
சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் கடந்த 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி முடிவடைந்தது.

இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆர்.பூர்ணலிங்கத்தை ஒருங்கிணைப்பாளராக கொண்டு குழு அமைக்கப்பட்டது. 37 பேர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 பேரை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து கவர்னர் முடிவுக்கு அனுப்பி வைத்தனர். எனவே, அந்த 3 பேரில் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி, தற்போது துணைவேந்தர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் சுதா சேஷய்யன் பதவி காலத்தை வருகிற டிசம்பர் 30-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு குழு அமைக்க வேண்டும் என்றும், அந்த குழுவின் மூலம் புதிய விண்ணப்பங்களை பெற்று துணைவேந்தரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்