ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
புதுச்சேரியில் ஓய்வுபெற்ற பாப்ஸ்கோ அதிகாரி வீட்டில் தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் ஓய்வுபெற்ற பாப்ஸ்கோ அதிகாரி வீட்டில் தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற அதிகாரி
புதுச்சேரி முதலியார்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 63). பாப்ஸ்கோ நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஸ்கரன் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக அண்மையில் கோவைக்கு சென்றார். புதுச்சேரியில் உள்ள வீட்டை வில்லியனூர் பகுதியை சேர்ந்த அவரது உறவினர் இளங்கோ (48) பராமரித்து வந்தார்.
நகை திருட்டு
நேற்று பாஸ்கரன் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்த உடன் அருகில் உள்ளவர்கள் இளங்கோவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் அந்த வீட்டுக்கு வந்து பார்த்தார். வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பாஸ்கரன் சிகிச்சைக்காக, மனைவியுடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
வலைவீச்சு
இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசில் இளங்கோ புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.