கஞ்சா விற்ற வாலிபர் கைது
கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மரக்காணம் அருகே அனுமந்தை டோல்கேட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் டோல்கேட் பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் சிறிது தூரம் துரத்திச்சென்று மடங்கினர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அனுமந்தை வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.