கோவை: வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ பற்றியதால் பரபரப்பு...!
கோவை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டி.என்.பாளைய,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 50), இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
சிவராஜ் இன்று டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர், தண்ணீர்பந்தல், கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வயலில் இருந்த வைக்கோலை விலைக்கு வாங்கி தனது லாரியில் ஏற்றிக்கொண்டு அன்னூரில் உள்ள முருகேஷ் என்பவருக்கு சொந்தமான காளான் பண்ணைக்கு கொண்டு சென்றார்.
அப்போது கள்ளிப்பட்டி அருகே வந்த போது லாரியில் உயரமாக வைத்து கட்டப்பட்டு இருந்த வைக்கோல் மின் கம்பியில் உரசியது. இதில் ஏற்பட்ட தீப்பொறி வைக்கோல் மீது விழுந்ததில் லாரியில் இருந்த வைக்கோலில் தீப்பற்றி எரிய தொடங்கியது.
வைக்கோல் என்பதால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைப்பதற்குள் லாரியில் இருந்த வைக்கோல் மற்றும் லாரியின் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமானது.
லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்தது குறித்து அருகில் இருந்தவர்கள் சத்தமிடவே, லாரி டிரைவர் சிவராஜ் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார்.
இந்த தீ விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.