கடலில் மூழ்கி மீனவர் பலி

சோலைநகரில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி மீனவர் பலியானார்.

Update: 2022-04-05 18:32 GMT
முத்தியால்பேட்டை சோலைநகர் வடக்கு பகுதி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 42), மீனவர். இவருக்கு இலக்கியா என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று அதிகாலை படகில் மீன்பிடிக்க கடலுக்குள் தனியாக சென்றார். கரையில் இருந்து சிறிது தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இதில் கடலில் விழுந்த அவர் மீனுக்காக விரித்து வைக்கப்பட்டு இருந்த வலைக்குள் சிக்கிக்கொண்டார். அப்போது அருகில் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. எனவே கடலில் மூழ்கி அவர் பலியானார்.
சிறிது நேரத்தில் அவரது உடல் சோலைநகர் இளைஞர் விடுதி அருகில் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது மனைவி, குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இது குறித்து சோலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று கலையரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சோலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்