ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு இன்று முதல் தடை

கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.;

Update:2022-04-01 09:23 IST
ஊட்டி, 

மலைகளின் அரசியான ஊட்டியில் தேயிலை தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள், மலைப்பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம். இயற்கை காட்சிகள், மலைகளை மோதி செல்லும் மேகக் கூட்டம் போன்றவற்றை படம் பிடிக்கின்றனர். 

குறிப்பாக தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி திரைப்படங்கள் ஊட்டியில் படமாக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் கட்டணம் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோடை சீசனில் தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு நிலையான தடை உத்தரவு கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, 

கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வழக்கத்தைவிட அதிகமாக வருவார்கள். மேலும் நடைபாதையோரம், மலர் பாத்திகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. 

செடிகளுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்க்கவும், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை. தோட்டக்கலை பூங்காக்களில் தடை அமலில் இருக்கும் என்றனர்.

மேலும் செய்திகள்