கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபடித்தனர்.;

Update:2022-03-30 01:35 IST
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் வினோத் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் விக்னேஷ்(வயது 26), முருகன் (35), சின்னமுனியன் (55) ஹரிகிருஷ்ணன் (42) ஆகிய 4 மீனவர்கள் சென்றிருந்தனர்.

இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

எச்சரித்து அனுப்பினர்

இந்த படகின் அருகே மீன்பிடித்த ராமேசுவரத்தை சேர்ந்த அடிமை என்பவருக்கு சொந்தமான படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்க முயன்றனர். ஆனால் அந்த படகில் இருந்த மீனவர் ஒருவர், விரைவில் தனக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும், அதனால் தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் என இலங்கை கடற்படையினரிடம் கேட்டு கொண்டார்.

இதையடுத்து இலங்கை கடற்படையினர் அந்த படகில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்யாமல் எச்சரித்து, திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

தமிழக மீனவர்கள் விஷயத்தில் இலங்கை கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என மத்திய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் அறிவுறுத்திய நிலையில், ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு படகு மற்றும் 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்