முகநூல் மூலமாக பழக்கம்: சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர் கைது..!
சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கரூரை சேர்ந்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி,
கரூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் மகன் ஆகாஷ் (வயது 20) அங்குள்ள உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் திருச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஆகாஷ் மாணவியை கடந்த 27-ம் தேதி ஆசை வார்த்தை கூறி வீட்டிலிருந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காதல் விவகாரம் என தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றி அவர்கள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் கரூர் வாலிபரோடு பேசி வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை கொல்லிமலை பகுதியில் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டனர்.
இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாக கல்லூரி மாணவர் ஆகாசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.