2 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவை தொடக்கம்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து பன்னாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.

Update: 2022-03-27 23:02 GMT
ஆலந்தூர்,

உலக முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவியதை தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி தீவிர கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கப்பட்டது. பின்னர் கொரோனா பீதியின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் இயங்கின.

பின்னர் 2020-ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் தொடங்கப்பட்டன. அப்போது தினமும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை காரணமாக பன்னாட்டு சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மத்திய அரசு அனுமதி

குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர், வேலைக்காக செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றுக்கு முந்தைய காலத்தில் 150-க்கும் மேற்பட்ட பன்னாட்டு விமான சேவைகள் இயக்கி வந்த நிலையில், சிங்கப்பூர், லண்டன், துபாய், குவைத், கொழும்பு, சார்ஜா, அபுதாபி போன்ற குறிப்பிட்ட வெளிநாடுகளில் உள்ள நகரங்களுக்கு 30 விமான சேவைகள் மட்டுமே இருந்தன.

இந்த நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றுடன் கூடிய 3-வது அலையின் தீவிரமும் அடங்கிய நிலையில், கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளை மத்திய அரசு விலக்கி கொள்ளலாம் என அறிவித்தது.

மேலும் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு விமான சேவைகளையும் முழுமையாக இயக்கி கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.

ஓரிரு வாரங்களில் சகஜநிலை

இதையடுத்து நேற்று முதல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய், மஸ்கட், கொழும்பு, சிங்கப்பூர், வங்கதேசம், லண்டன், சார்ஜா, குவைத், பக்ரைன் ஆகிய இடங்களுக்கு 30 விமானங்கள் புறப்பட்டு சென்றன. அதேபோல் கொழும்பு, லண்டன், துபாய் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 27 விமானங்கள் சென்னைக்கு வந்தன. முதல் நாளான நேற்று 57 விமான சேவைகள் மட்டும் இயங்கின. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கப்பட்ட பன்னாட்டு விமான சேவைகள் ஓரிரு வாரங்களில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சகஜநிலைக்கு திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து பன்னாட்டு விமான சேவை தொடங்கி உள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்