நீர்நிலை ஆக்கிரமிப்பு: 30 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் அகற்றம் - அதிகாரிகள் அதிரடி...!
திருவள்ளூர் அருகே 30 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை அதிகாரிகள் அகற்றினர்.
திருவள்ளூர்,
தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஏரி, குளங்கள், வாய்கல், ஆறுகள் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகல் அகற்றி வருகின்றனர்.
பல மாவட்டங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து நெல், கரும்பு, வாழை போன்றவற்றை விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இத்தகைய ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பல புகார்கள் வந்த நிலையில், இவற்றை அகற்றும் முயற்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துவந்தனர்.
அதன்படி, தமிழகத்தில் பல பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை ஜேசிபி மற்றும் டிராக்டர் எந்திரங்களை கொண்டு அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மேலானூரில் ஏரியை ஆக்கிரமித்து நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது.
இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் மேலானூர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஏரியை ஆக்கிரமிப்பு செய்து 30 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்து ஜேசிபி மற்றும் டிராக்டர் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு நெல் பயிர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது.
இதே போன்று மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்தார்.