மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து அவதூறு "ரூ.100 கோடி நஷ்ட ஈடு" அண்ணாமலைக்கு தி.மு.க நோட்டீஸ்

முதல்-அமைச்சர் துபாய் பயணம் குறித்து அவதூறு பேசியதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு 'பகிரங்க மன்னிப்பு, ரூ.100 கோடி நஷ்ட ஈடு' கேட்டு தி.மு.க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2022-03-26 10:21 GMT
சென்னை: 

தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றார். 

முதல்வரின் இந்தப் பயணம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமால் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்-அமைச்சரிடம்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் இன்று அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க. சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள நோட்டீசில்

 திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022-ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிற்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.

முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்