தேனி: கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - மடக்கிய அதிகாரிகளை ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற ஜீப்பை மறித்தபோது வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி,
தேனி மாவட்டம், போடி மெட்டு சாலை முனீஸ்வரன் கோவில் அருகே இன்று அதிகாலையில் உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை மறித்தனர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அதிகாரிகள் குழுவினர் மீது ஜீப்பை ஏற்றி கொள்ள முயற்சித்துள்ளார். சரியான நேரத்தில் அதிகாரிகள் குழுவினர் பின்னோக்கி நகர்ந்து உயிர் தப்பித்துக் கொண்டனர்.
பின்னர் அதிகாரிகள் மற்றொரு வாகனத்தில் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இதை அறிந்த ஜீப் டிரைவர் ஓடிக்கொண்டிருந்த வாகனத்திலிருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். ஜீப் அந்தப் பகுதியில் உள்ள பெரும் பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிகாரிகள் குழுவினர் ஜீப்பில் சோதனை செய்தபோது.அதில் கேரளாவுக்கு கடத்தி செல்ல இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தேனி மாவட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.