கோர்ட்டில் ஆஜராக வந்த போது கைவரிசை - கொள்ளை நகைகளை அடகு வைத்து மனைவிக்கு வளைகாப்பு..!
சென்னையில் கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்து மனைவிக்கு வளைகாப்பு நடத்திய முன்னாள் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை, வேளச்சேரி வீனஸ்காலனி 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 70). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர், பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றார்.
இது குறித்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில், கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் புகழ்வேந்தன் தலைமையில், வேளச்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இந்துமதி கொண்ட தனிப்படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கொள்ளையடித்தவர் முன்னாள் குற்றவாளி முத்துக்கிருஷ்ணன் (32) என்பது தெரியவந்த நிலையில், கோவை சென்ற தனிப்படை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சம்பவத்தன்று கொளத்தூர் காவல் நிலைய வழக்கு தொடர்பாக எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது வேளச்சேரியில் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும் கொள்ளையடித்த நகையை அடகு வைத்து மனைவிக்கு வளைகாப்பு நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து முத்துகிதுஷ்ணனை கைது செய்த போலீசார், 56 பவுன் தங்க நகைகள், ரூ.4.5 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.