அ.தி.மு.க. ஆட்சியில் 97 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன எடப்பாடி பழனிசாமி பேட்டி

பேரவை விதி எண் 110-ன் கீழ் அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 97 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;

Update:2022-03-25 03:22 IST
சென்னை,

நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவர் 10 ஆண்டுகாலம் நிதி அமைச்சராக இருந்தவர். முதல்-அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக இருந்து பணியாற்றிவர். இப்படி அனுபவம் மிக்க அவர், பட்ஜெட் மீது கருத்துகளை சொல்லிகொண்டிருக்கும்பொழுதே, திட்டமிட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடீரென அவையில் இருந்து வெளியேறிவிட்டார்.

அவர், அவையினுடைய கண்ணியத்திற்கு குறைவாக நடந்துகொண்டதாலும், வேண்டுமென்றே, திட்டமிட்டு வெளியேறியது, எதிர்க்கட்சிகளை அவமானப்படுத்துவதாக கருதி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

உண்மையை மறைத்துவிட்டார்

நேற்றைய தினம் முதல்-அமைச்சர், பேரவை விதி எண் 110-ன் கீழ் அ.தி.மு.க. சார்பாக 2011-ம் ஆண்டில் இருந்து 2021 வரை எவ்வளவு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. எவ்வளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. எவ்வளவு பணி நடைபெற்று வருகிறது. எவ்வளவு கைவிடப்பட்டது என்று சொன்னார். ஆனால் உண்மை செய்தியை மறைத்துவிட்டார்.

அவர் அளித்த புத்தகம். அரசு சட்டமன்றத்தில் வைத்த புத்தகத்திலே அவர்களே தெரிவித்துள்ளார்கள். நாங்கள் சொல்லவில்லை. நாட்டின் முதல்-அமைச்சரே தெளிவுபடுத்தியுள்ளார். ஜெயலலிதா இருக்கும்போது சரி, அவர் மறைவுக்கு பிறகும் அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் சட்டமன்றத்திலே மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய 110 விதியின் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு தாக்கல் செய்துள்ள புத்தகத்திலே இடம் பெற்றுள்ளது. இதில் நிறைவேற்றப்பட்ட பணிகள் 1,167. நடைபெற்றுவரும் பணிகள் 491. ஆக மொத்தம் 1,058 பணிகள் இன்றைக்கு செயல்பட்டுகொண்டிருக்கின்றன.

ஒரே ஆண்டில் நிறைவேற்ற முடியாது

ஒரு திட்டத்தை அரசு அறிவித்தால் ஒரே ஆண்டில் நிறைவேற்ற முடியாது. ரெயில்வே பாலம், உயர்மட்ட பாலம் இருக்கிறது. இவை 3 ஆண்ட்கால திட்டமாக இருக்கும். சாலை போடும்போது பல்வேறு பிரச்சினைகள் இருக்கும். அவை போடுவதற்கு 2, 3 ஆண்டுகாலம் ஆகும். ஒரு திட்டத்தை ஒரே வருடத்தில் நிறைவேற்ற முடியாது. அது அவர்களுக்கும் தெரியும். இதுதான் நடைமுறை.

கொரோனா தொற்று இருந்த காலத்திலே முழுமையாக பணி செய்யமுடியாத ஒரு சூழ்நிலை. இதுதான் அவர் அளித்த புள்ளிவிவரம். 20 அரசாணைகள் பிறப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 2020-21-ம் ஆண்டு கொரோனா காலம். இதனால் அரசாணை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

97 சதவீத பணிகள் நிறைவேற்றம்

அதற்குள் தேர்தல் வந்துவிட்டது. தேர்தல் வந்த காரணத்தினால் நிறைவேற்ற முடியவில்லை. 26 அறிவிப்புகள் கைவிடப்பட்டதாக அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவேண்டும். நிலம் எடுக்கவேண்டும். இப்படி பல பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினாலே 26 அறிவிப்புகள் கைவிடப்பட்டன.

1,704 அறிவிப்புகளில் 26 மட்டும்தான் கைவிட்டுள்ளோம். 97 சதவீத பணிகள் நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. 2011-ல் இருந்து 2021 வரை சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 97 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளை அறிக்கை தர வேண்டும்

தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், ‘‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் 510-ல் 208 வாக்குறுதிகள் 8 மாதத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாரே’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘இதற்கு அவர்தான் வெள்ளை அறிக்கை தரவேண்டும். நிறைவேற்றப்பட்ட 208 வாக்குறுதிகள் என்ன என்று விளக்கவேண்டும்’’ என்று பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்