தூத்துக்குடி: கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்...!

தூத்துக்குடி அருகே கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-24 11:30 GMT
கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வில்லிசேரி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் தமிழக அரசு அறிவித்த 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில்,

கூட்டுறவு வங்கியில் வில்லிசேரியை சேர்ந்த ஆயிரத்து 992 பேர் நகைகளை வைத்து கடன் பெற்று உள்ளனர்.  ஆனால் வங்கியில் நகை கடன் பெற வங்கியில் பணம் இல்லாததால் அனைவருக்கும் பாண்டு பத்திரம் வழங்கி சில நாட்கள் கழித்து பணம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

ஆனால் நீண்ட நாட்களாகியும் பணம் வழங்கவில்லை. ஆகவே மக்கள் அங்குள்ள வங்கி செயலாளரிடம் பலமுறை கேட்டதற்கு விரைவில் பணம் கொடுத்து விடுவோம். உங்களது பாண்டு பத்திரங்களை கொடுத்து விட்டு வங்கி புத்தகத்தில் வங்கி கணக்கை வரவு வைத்துக்கொள்ளுங்கள் என கூறி புத்தகத்தில் பணம் வரவு வைத்தனர்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று பணம் எடுக்க சென்றால் பணம் இல்லை என அனுப்பிவிடுகின்றனர்.  மேலும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வாங்கி கடன் தள்ளுபடி ஆகியுள்ளது. ஆகவே முறையாக நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பாலகிருஷணன் தலைமையிலான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தைநடத்தினர்.

அப்போது கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன் கூரியதாவது,

தகுதியுடைய அனைத்து வாடிக்கையாளர்களும் மீண்டும் தங்களது வங்கி அட்டை, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, இத்துடன் ஒரு மனுவையும் மாவட்ட கூட்டுறவு வங்கி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் அதனை பரிசீலனை செய்து தகுதியுடையவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் நாளை முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒரு வார காலத்திற்கு அங்கு நடைபெற்ற தவறுகளை கணக்கு வழக்குகளை சரிபார்ப்பதற்கு ஆடிட்டர்கள் வரவழைக்கப்பட்டு முறையாக வங்கி கணக்குகள் ஆய்வு செய்து செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்