அடுத்த 3 மாதத்துக்கு பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

தமிழகத்தில் அடுத்த 3 மாதத்துக்கு பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-03-23 23:46 GMT
சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஆப்டோமெட்ரிக் அசோசியேஷன் ஆப் தமிழ் நண்பர்கள் சார்பில் ‘‘மயோபியா’’ பார்வை குறைபாடு தொடர்பான விழிப்புணர்வு குறுந்தகட்டினை வெளியிட்டார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘‘மயோபியா’’ பார்வை குறைபாடு, கிட்டப் பார்வை குறைபாடு என்று சொல்லப்படுகிறது. இந்த பார்வை குறைபாட்டில் தூரப்பார்வை மங்கலாகத் தெரியும். இந்த பாதிப்பு சில ஆண்டுகளாக 2 அல்லது 3 மடங்காக உயர்ந்து கொண்டே செல்கிறது என்ற அதிர்ச்சி தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

2050-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் சராசரியாக 50 சதவீதம் பேரை ‘‘மயோபியா’’ பார்வைக் குறைபாடு தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய அச்சுறுத்தலிலிருந்து விடுபட நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த குறுந்தகட்டினை தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் இந்த குறுந்தகட்டின் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

உக்ரைனில் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களை மீட்பதற்கு உடனடியாக முதல் நடவடிக்கை மேற்கொண்டது முதல்-அமைச்சர் தான். அதற்காக ஒரு அலுவலகம் திறந்து அங்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்பதற்கும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை முதல்-அமைச்சர் செய்தார்.

விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை

அந்த மாணவர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்று அவற்றை மத்திய அரசின் அமைச்சரை சந்தித்து அவர்களுக்கான எதிர்கால வாழ்விற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கிறோம். மினி கிளினிக் என்பது ஒரு ஆண்டுக்காக ஏற்படுத்தப்பட்டது. அதில் அரசு பணிகளில் சேருவதற்கான எந்த ஒரு விதிமுறைகளையும் கடைப்பிடிக்கவில்லை.

அதனால், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று, மனிதாபிமான அடிப்படையில் தேவையான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்கள், நாடுகளில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, இன்னும் 3 மாதத்துக்கு பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்