பத்மஸ்ரீ விருது பெற்று விராலிமலை திரும்பிய சதிராட்ட பெண் கலைஞருக்கு உற்சாக வரவேற்பு
சதிராட்ட பெண் கலைஞருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விராலிமலை:
விராலிமலையை சேர்ந்தவர் முத்துகண்ணம்மாள். சதிராட்ட கலையில் தேர்ச்சி பெற்றவர். இவர் சதிராட்ட கலையின் கடைசி வாரிசாகவும் தற்போது கருதப்படுகிறார். இந்நிலையில் மத்திய அரசால் கடந்த ஜனவரி 25-ந் தேதி அவர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சதிராட்ட கலைஞரான விராலிமலை முத்துக்கண்ணமாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்று நேற்று விராலிமலைக்கு திரும்பிய அவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் விராலிமலை முருகன் கோவில் அடிவாரத்திலிருந்து மேள தாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் காரில் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக அவரை அழைத்துச்சென்றனர். இதில் வழிநெடுகிலும் நின்றிருந்த பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.