குடியாத்தம் அருகே 4 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை - குழந்தைகள் கதறல்

குடியாத்தம் அருகே 4 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-21 16:16 GMT
வேலுர்,

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன், பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அணைக்கட்டு தாலுக்கா மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சிந்துபைரவி (வயது 27) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சிந்துபைரவி இன்று மதியம் வீட்டில் புடவையால் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிந்துபைரவியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிந்துபைரவி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

சிந்து பைரவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் அவரது தாயார் தேன்மொழி அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கணபதி,சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு குழந்தைகளை தவிக்கவிட்டு தாயார் சிந்து பைரவி தற்கொலை செய்து கொண்டதால் குழந்தைகள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்