காவலர் பணிக்கு ரூ.7 லட்சம் பேரம்

புதுச்சேரியில் காவலர் தேர்வில் ரூ.7 லட்சம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக பேரம் நடப்பதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Update: 2022-03-20 18:04 GMT
புதுச்சேரியில் காவலர் தேர்வில் ரூ.7 லட்சம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக பேரம் நடப்பதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். 
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
வெற்றி-தோல்வி சகஜம்
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. பஞ்சாப் மாநில தேர்தலை பொறுத்தவரை உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த தோல்விக்கு ஒருசிலர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி தான்  காரணம் என்று கூறுகிறார்கள். இது மிகவும் தவறு. இந்த தோல்விக்கு அனைத்து காங்கிரசாரும் பொறுப்பேற்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி- தோல்வி சகஜம். இந்த நேரம் நாம் ஒன்றிணைந்து சோனியாகாந்தி, ராகுல்காந்தி கரத்தை பலப்படுத்த வேண்டும். ஒருமித்த கருத்துகள் கொண்ட மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் பா.ஜ.க.வை எளிதில் வீழ்த்தி விடலாம். அதற்கான வியூகத்தை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். இதனை தோல்வியாக கருதாமல் வெற்றிக்கான முதல்படியாக எண்ணுவோம்.
பட்ஜெட் தாமதம் ஏன்?
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசு,  திட்டங்களை அறிவித்து அதனை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற காலதாமதம் ஆகிறது. இதற்கான காரணம் என்ன?
கடந்த மாதம் (பிப்ரவரி) 20 நிமிடம் சட்டசபை நடந்தது. இப்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபை கூட உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுடன் இணக்கமாக உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியால் முழுமையாக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான அனுமதியை ஏன் பெற முடியவில்லை. இதற்கான காரணத்தை பா.ஜ.க.வினர் தெரிவிக்க வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
ரூ.7 லட்சம் பேரம்
புதுச்சேரியில் காவலர் தேர்வில் ரூ.7 லட்சம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக பேரம் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரடியாக தலையிட்டு தகுதி அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கு இடம் கொடுக்காமல் காவலர் பணியிடங்கள் தகுதி, திறமை அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்