பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் - வாகனங்கள் பறிமுதல்
சென்னையில், இரவு நேரத்தில், பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னையில் வார இறுதி நாட்களின் இரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து காமராஜர் சாலை, மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் இரவில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதிக சி.சி திறன் கொண்ட பைக்குகளில் மெரினா கடற்கரைக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காமராஜர் சாலையில், பைக்குகளை அதிவேகமாக செலுத்தி சாகசத்தில் ஈடுபட்டனர். அதே போல் ஜெமினி மேம்பாலத்தில் இருந்து ஆர்.கே. சாலை வழியாக பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.