காலாவதியான குளிர்பானம்; பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
குளிர்பானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்த பிறகே விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்தி ஆய்வில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து ரூ.9.02 லட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 484 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், குளிர்பானம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கட்டாயமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ல் உள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளிர்பானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்த பின்னரே நுகர்வோர் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டும் எனவும், குளிர்பான பாட்டில் மீதுள்ள லேபிள்களில் ஊட்டச்சத்து குறித்த தகவல் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் குளிர்பான பாட்டில்களில் காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதே போல் பொதுமக்கள் குளிர்பானங்களை வாங்கும்போது காலாவதி தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும் எனவும், தரமற்ற, காலாவதியான குளிர்பானங்கள் குறித்து 94440 42322 என்ற ‘வாட்ஸ்-ஆப்’ எண்ணிற்கு புகார் அளிக்கலாம் எனவும் உணவு பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.