தமிழக வரலாற்றில் ‘பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க பட்ஜெட்' முதல்-அமைச்சர் புகழாரம்

2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2022-03-18 23:04 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட், தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க வகையில் உள்ளது. தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கை அறிக்கையாக அது அமைந்துள்ளது.

10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் அதலபாதாளத்துக்கு போனது. குறிப்பாக நிதித்துறை அடைந்த மிகமோசமான நிலைமை கவலைக்குரியது. 5½ லட்சம் கோடி ரூபாயை கடனாக வைத்துவிட்டு நிதியை சூறையாடிய அ.தி.மு.க. அரசு மக்களால் தோற்கடிக்கப்பட்டது.

வருவாய் அதிகரிப்பு

நிதிநெருக்கடியான சூழலில் ஆட்சி பொறுப்பேற்ற போதும், கடந்த கால கசப்புகளை சமாதானமாக சொல்லாமல், பல்வேறு ஆக்கபூர்வமான உதவிகளை தி.மு.க. அரசு செய்தது.

இருக்கும் நிதியை முறைப்படி கையாளுதல், தேவையான செலவினங்களை மட்டும் செய்தல், வருவாயை அதிகப்படுத்துதல், தேவையற்ற செலவுகளை குறைத்தல் ஆகிய திட்டமிடுதல்களின் மூலமாக அரசுக்கு வருவாய் அதிகமாகி உள்ளது. செலவு குறைந்துள்ளது.

அதை விட முக்கியமாக வருவாய் பற்றாக்குறை என்பதும் குறைந்துள்ளது. இது மிக முக்கியமான சாதனையாகும்.

‘திராவிட மாடல்’ பாணி தொடரும்

மாநிலத்தின் வரி வருவாய் பாதித்த நிலையிலும் இந்த சாதனை செய்யப்பட்டுள்ளது. சமூகநல திட்டங்களில் எந்த குறையும் வைக்காமல், வளர்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து நிதி நிர்வாகத்தையும் வளர்த்துள்ளோம் என்பதை இந்த பட்ஜெட் எடுத்துக்காட்டி உள்ளது.

‘திராவிட மாடல்' பாணி தொடரும் என்பதையும் இந்த பட்ஜெட் உணர்த்துகிறது.

அரசு பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலமாக மாணவிகள் அனைவரும் இனி கல்லூரிகளை நோக்கி வருவார்கள்.

வளமானதாக ஆக்கும்

சமூகத்தில் அவர்களது பங்களிப்பு என்பது இனி எக்காரணம் கொண்டும் பள்ளிக்கல்வியோடு தடைபடாது. அரசுப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் என அனைத்து பள்ளிகளையும் மேம்படுத்துவதற்காக பேராசிரியர் அன்பழகன் பெயரில் செய்யப்பட உள்ள சீர்திருத்தமானது தமிழகத்தில் கல்வி கற்கும் சூழலை வளமானதாக ஆக்கும்.

தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தை முழுமையாக முன்னேற்றும் குறிக்கோளை நோக்கமாக கொண்டு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.

மகளிர் உரிமை தொகை தருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக நிதி அமைச்சர் வாக்குறுதியை உறுதி செய்துள்ளார்.

தமிழ்நாடு மேன்மையடையும்

நீர்நிலைகள் பராமரித்தல், உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவம், மகளிர் நலம், சுற்றுலா, இந்துசமய அறநிலையத்துறை, சூழலியல், சாலைகள், பாலங்கள், அணைகள், சமத்துவபுரங்கள் சீரமைப்பு, புதிய மாநகராட்சிகளுக்கு நிதி, புதிய நகராட்சிகளுக்கு நிதி, சிங்கார சென்னை திட்டம், திறன்மிகு நகரங்கள் மேம்பாடு, குடிநீர் திட்டங்கள், மதுரவாயல் - சென்னை துறைமுகம் இரட்டை அடுக்கு உயர்மட்ட பாலம், புதிய டீசல் பேருந்துகள், புதிய மின் பேருந்துகள், புத்தொழில் மையங்கள் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் நோக்கிய பயணத்துக்கான கலங்கரை விளக்கமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

தந்தை பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் எடுத்துச் செல்ல வழிவகுத்திருக்கும் இந்த பட்ஜெட் பழமைவாத கருத்துகள் என்னும் இருள் கவ்வியிருக்கும் பகுதிகளுக்கு, அறிவொளி பாய்ச்சும் அறிவிப்பாக அமைந்திருக்கிறது.

‘இந்த பட்ஜெட் ஒரு மாபெரும் மாற்றத்துக்கான தொடக்கம்' என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். மாற்றத்துக்கான தொடக்கம் மட்டுமல்ல, மேன்மையடையும் தமிழ்நாடு என்பதற்கான தொடக்கமாகவே நான் கருதுகிறேன்.

25 ஆண்டுகால உயர்வு

10 ஆண்டுகால சரிவை சரிசெய்வது மட்டுமல்ல, அடுத்த 25 ஆண்டு கால உயர்வை உணர்த்துவதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

‘எல்லார்க்கும் எல்லாம்' என்ற நூற்றாண்டு கால திராவிட-சமூகநீதி கொள்கைகளையும், இக்கால நவீன தேவைகளையும் உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி காட்டினாலே உன்னதமான தமிழ்நாடு நம் கண்முன்னே உருவாகிவிடும். அத்தகைய தொலைநோக்கு பார்வையை இந்த பட்ஜெட் கொடுக்கிறது.

தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுட பற்றையும் கொண்டதாக இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. வாருங்கள், நாம் அனைவரும் சேர்ந்து வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்