மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலைநிறுத்தத்துக்கு தி.மு.க. ஆதரவு

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடக்கும் 2 நாட்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Update: 2022-03-17 23:57 GMT
சென்னை,

‘நாட்டை காப்போம், மக்களை காப்போம்’ என்ற முழக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, நாட்டுக்கு விரோதமான கொள்கைகளை கண்டித்து வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என தொ.மு.ச. உள்ளிட்ட 10 தொழிலாளர் சங்க நிர்வாகிகள், கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்கள்.

தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறுதல், தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. மத்திய பா.ஜ.க. அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், அறிவிக்கும் ஒவ்வொரு கொள்கையும் மாநில உரிமைகளை மட்டுமின்றி, தொழிலாளர்களின் உரிமைகளையும் அடியோடு பறிக்கும் வகையில் இருக்கிறது.

தொழிலாளர்களின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் விதமாக இருந்து வருகிறது. இத்தகைய அராஜகமான நடவடிக்கைகளும், ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளும், மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மின்சார திருத்த சட்டம் விவசாயிகளின் நலனுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

தி.மு.க. ஆதரவு

ஆகவே தொழிலாளர் நல விரோத அரசாக இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த அகில இந்திய பொது வேலைநிறுத்தத்துக்கு தி.மு.க. சார்பில் முழு ஆதரவு வழங்கப்படும் என்பதை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலோடு தெரிவித்து கொள்கிறேன்.

இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் தி.மு.க.வினரும், தொ.மு.ச. பேரவை நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பங்கேற்று தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுத்திடவும், அகில இந்திய பொது வேலைநிறுத்தம் வெற்றி பெற்றிடவும் முழு மூச்சுடன் போராட்ட களத்தில் நின்று ஆதரவு அளித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்