அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான ஆதார ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான ஆதார ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-03-17 21:30 GMT
சென்னை,

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே தமிழ்நாடு போலீசார் 3 குற்ற வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இதில், ஒரு வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்து விட்டது. 2 வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில், இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிரான ஆதாரங்களை, அதாவது டிஜிட்டல் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை தங்களுக்கு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு உதவி செசன்சு கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்தார்.

மனு தள்ளுபடி

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதுபோல உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், துணை இயக்குனர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னாவை, ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக (அமிக்கஸ்கூரியாக) நீதிபதிகள் நியமித்தனர். கடந்த 3 நாட்களாக இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர்.

ஆதார ஆவணங்கள்

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜராக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘‘செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு சில ஆதார ஆவணங்கள் தேவைப்படுகிறது. அதை போலீஸ் தரப்பில் கேட்டபோது வழங்கவில்லை. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தும், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. எதற்காக போலீசார் இவ்வாறு செயல்படுகின்றனர் என்று தெரியவில்லை?’’ என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா, ‘‘போலீஸ் தரப்பில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சென்னை போலீஸ் கமிஷனர் கொடுத்துவிட்டார். மீதமுள்ள ஆவணங்கள் சிறப்பு கோர்ட்டில் உள்ளன. அந்த கோர்ட்டை அணுகி தான் மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று வாதிட்டார்.

தள்ளி வைப்பு

மேலும், ‘‘போலீசாரிடம் ஆவணங்களை கேட்டோம், அதை தரவில்லை என்று கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் மனுதாரர் எதுவும் கூறவில்லை. ஐகோர்ட்டில் வந்து இப்படி ஒரு தகவலை தெரிவிப்பது நியாயமற்றது’’ என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்