சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய் சீரமைக்கும் பணிகள்: மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை வேப்பேரி, புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் சீரமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-17 07:11 GMT
சென்னை, 

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் எதிர்வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு காண, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டது. கடந்த பருவமழையின்போது மழைநீர் தேங்கிய இடங்களில், இந்த குழுவினர் ஆய்வு செய்து முதற்கட்ட அறிக்கையை அரசுக்கு வழங்கினர். 

அதன் அடிப்படையில், ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில், 186 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு ஒப்பம் இறுதி செய்யப்பட்டது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.

இதன்படி இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக சென்னை முழுவதும் மழைநீர் தேங்கும் இடங்களில் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை வேப்பேரியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து  சென்னை, புளியந்தோப்பு பகுதியில் மாநில மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.3.20 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து புளியந்தோப்பு, மயிலாப்பூர் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர், வடசென்னையைத் தொடர்ந்து தென்சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறும், மழைநீர் தேங்காமலிருக்க நடவடிக்கைகளை தீவிரபடுத்தவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனிடையே பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் மனுக்களையும் பெற்றார். 

மேலும் செய்திகள்