நடத்தையில் சந்தேகம்: கழுத்தை நெரித்து பெண் படுகொலை - கணவர் கைது

பெங்களூருவில் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து பெண் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-10 16:23 GMT
பெங்களூரு,  

பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காலப்பா லே-அவுட்டில் வசித்து வருபவர் நீலகண்டா(வயது 38). இவரது மனைவி நாகம்மா(36). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நீலகண்டா, நாகம்மாவின் சொந்த ஊர் ராய்ச்சூர் ஆகும். கடந்த 17 ஆண்டுகளாக அவர்கள் பெங்களூருவில் வசித்தனர். டிரைவரான நீலகண்டா கார் ஓட்டி வருகிறார். அவரது மனைவி வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், தனது மனைவி நாகம்மாவின் நடத்தையில் நீலகண்டா சந்தேகம் அடைந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல், நேற்று முன்தினமும் அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது.

அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த நீலகண்டா வீட்டில் இருந்த பெல்ட்டால் தனது மனைவி நாகம்மாவின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவா் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். உடனே வீட்டில் இருந்து நீலகண்டா சென்றுவிட்டார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து நாகம்மா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

மேலும் நீலகண்டாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது நடத்தையில் சந்தேகப்பட்டு நாகம்மாவுடன் தினமும் அவர் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த சண்டையின்போது நீலகண்டாவை விவாகரத்து செய்ய போவதாக நாகம்மா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நீலகண்டா தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான நீலகண்டாவிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்