தமிழகம் முழுவதும் 2-ம் நிலை நகரங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

எல்காட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-10 01:56 GMT
சென்னை,

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் 9-ந் தேதியன்று (நேற்று) சென்னை நந்தனத்திலுள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் (எல்காட்) துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டி வருமாறு:-

பழமை வாய்ந்த நிறுவனமான எல்காட் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சரின் அறிவுத்தலின்படி, 2-ம் நிலை நகரங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

2-ம் நிலை நகரங்களில் தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிக்க ஏதுவாக கனெக்ட் கருத்தரங்கங்கள் விரைவில் நடைபெற உள்ளன. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், கணினி மற்றும் இதர வன்பொருள்களை இணையதளம் மூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த இணைய தளம் பயன்பாட்டிற்கு வரும்.

எல்காட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிதி மேலாண்மை குறித்து திட்டங்கள் வகுத்து கையேடாக உருவாக்கப்பட்டு வருகிறது. 2 முழு நேர ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வழிகாட்டுதலில் எல்காட் நிறுவனம் நிர்வாக ரீதியாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்