அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை

அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திடீரென்று ஆலோசனை நடத்தினார்.;

Update:2022-03-04 02:20 IST
சேலம்,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

இதனிடையே, அ.தி.மு.க. வில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் எனக்கூறி தேனி மாவட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்தனர். இது அ.தி.மு.க.வினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை

இந்தநிலையில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். இதில், முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியில் மேலும் தொண்டர்களை சேர்ப்பது மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள், மக்கள் பிரச்சினைகளுக்காக கூட்டத்தில் எவ்வாறு பேசுவது என்பது குறித்தும், இன்று நடைபெற உள்ள மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் கவுன்சிலர்கள் அவசியம் பங்கேற்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு

இதற்கிடையே தேனி கைலாசப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது பண்ணை வீட்டில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்தார்.

அப்போது அ.தி.முக.வில் சசிகலா, தினகரனை இணைப்பது குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் மாலை 5 மணியளவில் திருப்பூர் முன்னாள் எம்.பி.சத்யபாமா, வட சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் குன்றத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும் செய்திகள்