மத்திய அரசு மந்திரிகளை அனுப்பிய நிலையில் சிறப்பு குழுவின் தேவை என்ன? அண்ணாமலை கேள்வி
உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகளை மீட்பு பணிக்கு அரசு அனுப்பிய நிலையில் சிறப்பு குழுவின் தேவை என்ன? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.;
சென்னை,
ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டிடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷியா கைப்பற்றி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மாணவர்களை மீட்பதற்கான தமிழக அரசின் குழுவுக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும். தமிழக மாணவர்கள் 193 பேர் மட்டுமே இதுவரை தாயகம் திரும்பியுள்ளனர்.
தமிழக மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தனி கவனம் செலுத்த வேண்டும். ரஷியா வழியாக மாணவர்களை அழைத்து வர மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் அழைத்து வர தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசும்போது, அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் ஒரே நாடு இந்தியாதான். தமிழக மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் அளிக்க குழுவை அனுப்புவதே மாநில அரசின் தற்போதைய தேவை.
மத்திய அரசு மூத்த மந்திரிகளை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மீட்பு பணிக்கு அனுப்பியுள்ள நிலையில் சிறப்பு குழுவின் தேவை என்ன? என்று தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வியும் எழுப்பி உள்ளார்.
இந்திய மாணவர்களை மீட்க பிரதமர் மோடி இரவு பகல் பாராது உழைத்து வருகிறார். ஆனால், தி.மு.க. அரசோ சிலரது கவனம் ஈர்க்க மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறது என்று சாடியுள்ளார்.