உக்ரைன் போரால் பங்கு சந்தையில் நஷ்டம் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
உக்ரைன் போரால் பங்கு சந்தையில் பல லட்சம் ரூபாயை இழந்த பல்கலைக்கழக மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலாப்பட்டு
உக்ரைன் போரால் பங்கு சந்தையில் பல லட்சம் ரூபாயை இழந்த பல்கலைக்கழக மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்கலைக்கழக மாணவர்
மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் பிரவீன் டேனியல் (வயது 31). இவர் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பொருளாதாரவியல் முதலாமாண்டு படித்து வந்தார்.
இதற்காக பிள்ளைச்சாவடி அன்னைநகர் பிள்ளையார் கோவில் வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கியிருந்தார். கடந்த 25-ந்தேதி பிறகு பிரவீன் டேனியல் கல்லூரிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
துர்நாற்றம்
இந்தநிலையில் அவர் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காலாப்பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர்.
அப்போது அங்குள்ள சமையலறையில் பிரவீன் டேனியல் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் தான் பிரவீன் டேனியலின் பெற்றோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று, அதன்மூலம் கிடைத்த வருவாயை 2 மகன்களுக்கும் தலா ரூ.25 லட்சத்தை கொடுத்துள்ளனர். அதில் சில லட்சம் ரூபாயை பிரவீன் டேனியல் ஆன்லைன் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் காரணமாக பங்கு சந்தையில் அவருக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பிரவீன் டேனியல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உக்ரைன் போரால் பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து பல்கலைக்கழக மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.