வேறு நபருடன் திருமணம் நிச்சயமானதால் காதலி படத்துடன் போஸ்டர் ஒட்டிய வாலிபர்....!
வேறு நபருடன் திருமணம் நிச்சயமானதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் காதலி படத்துடன் போஸ்டர் ஒட்டினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பெண் தனது காதலனை சந்திப்பதை தவிர்த்துவிட்டு, காதலை துண்டித்தார். இதனால் அந்த வாலிபர் மனவேதனையில் தத்தளித்தார். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இதையறிந்த அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். தன்னை காதலித்து விட்டு தற்போது வேறு நபருக்கு மாலை சூட தயாரான தனது காதலிக்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைத்தார்.
அதன்படி அந்த வாலிபரும், இளம்பெண்ணும் காதலிக்கும்போது சேர்ந்து எடுத்த புகைப்படம், வாலிபருக்கு இளம்பெண் எழுதிய காதல் கடிதம் ஒன்று ஆகியவற்றுடன் போஸ்டர் அச்சடித்து, களக்காடு பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார்.
இதை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசியல் கட்சி பிரமுகரான அந்த வாலிபர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் களக்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.