திருச்சி: 700 பேர் பங்கேற்ற மாநில யோகாசன போட்டி..!
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டியில் 700 பேர் பங்கேற்றனர்.
திருச்சி,
12-வது மாநில ஒபன் யோகாசன போட்டி திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் இன்று நடந்தது. கலைக்கோவில் யோகாலயம் சார்பில் நடந்த இந்த போட்டியில் திருச்சி, கரூர், தஞ்சை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகளை போலீஸ் உதவி கமிஷனர் பாஸ்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றவருக்கு தங்க நாணையம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 2-வது மற்றும் 3-வது இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி நாணையங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு யோகா மாஸ்டர்ஸ் சங்க தலைவர் இளஞ்செழியன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலைக்கோவில் யோகாலய தலைவர் சசிக்குமார், பொதுச்செயலாளர் காளீசன், அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் டெல்லியில் நடக்கும் தேசிய போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.