தமிழ்நாட்டில் ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் அதிகமாக வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உருவாக்கிய மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்களை அவர்களுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை ,
சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்க திட்ட தொடக்க விழா கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல் -அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்களை அவர்களுக்கு வழங்கினார்.
இந்த விழாவில் முதல் -அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது;
இந்தியாவில் இருக்க கூடிய மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பது பெருமை கூறிய விஷயம்.பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் , பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இருப்பது போல எந்த மாநிலத்திலும் கிடையாது.
வெளிநாடுகளில் இருக்க கூடிய புதுவித படிப்புகள் , பட்டங்கள் அனைத்தையும் நமது மாநிலத்தில் புகுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் தேவையை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்வில் உயர்வினை கொண்டு வருவதே சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்க திட்டத்தின் நோக்கம்.
மாணவர்கள் கல்வி கற்கும் சமயத்திலே சமுதாயத்தின் தேவைகளையும் கண்டறிந்து பூர்த்தி செய்யவேண்டும் . மாணவர்களின் கண்டுபிடிப்புகள் சிறிதாக இருந்தாலும் அவர்களின் மனிதநேயம் பெரியது.
தமிழ்நாட்டில்தான் ஆற்றல் சக்தி அதிகம். ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் அதிகமாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.