வாக்குப்பதிவு எந்திரங்கள் அறையின் சாவி தொலைந்த விவகாரம்: மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி அ.தி.மு.க.வினர் போராட்டம்
கடலூர் மாநகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்ட அறையின் சாவி தொலைந்ததை அடுத்து அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் கடந்த 16-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணும் நாளான நேற்று காலை வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை அதிகாரிகள் திறக்க சென்றனர்.
ஆனால் அப்போது அந்த அறையின் சாவி தொலைந்ததால் சுமார் 45 நிமிடத்திற்குப் பிறகு எந்திரம் மூலம் பூட்டை அறுத்து திறந்தனர். அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 30 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 6 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கடலூர் மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்து தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளதாகவும், அதனால் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் அவர்கள் கடலூர் உழவர் சந்தை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.