சென்னை மாநகராட்சி தேர்தலில் 153 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் 153 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.வுக்கு 15 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 5 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடி முத்திரை பதித்துள்ளனர்.

Update: 2022-02-22 22:01 GMT
சென்னை,

200 வார்டுகளை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. 167 இடங்களில் போட்டியிட்டது. இதில் 153 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது. 14 வார்டுகளை இழந்தது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களையும், 6 இடங்களில் களம் இறங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்களிலும், 5 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 இடங்களிலும், 3 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

2 வார்டுகளில் களம் இறங்கிய ம.தி.மு.க.வும், ஒரு வார்டில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் முழு வெற்றியை பதிவு செய்தன.

பா.ஜ.க., அ.ம.மு.க.வுக்கு ஒரு இடம்

அ.தி.மு.க. 200 வார்டுகளிலும் போட்டியிட்டது. ஆனால் 15 வார்டுகளில் மட்டுமே வெற்றி கிடைத்து இருக்கிறது. அதே போன்று 200 வார்டுகளில் தனித்து களம் இறங்கிய பா.ஜ.க.வுக்கு ஒரு வார்டு மட்டுமே கிடைத்தது. 199 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்திய அ.ம.மு.க.வுக்கும் ஒரு வார்டில் மட்டும் வெற்றி கிடைத்தது.

199 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய நாம் தமிழர் கட்சிக்கும், 198 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய பா.ம.க.வுக்கும், 177 இடங்களில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்துக்கும், 141 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க.வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 17 இடங்களில் போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சிக்கும் வெற்றிவாய்ப்பு கை கூடவில்லை.

சுயேச்சைகள் முத்திரை

அனைத்து வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். இதில் 2, 23, 92, 194, 198 ஆகிய 5 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் முத்திரை பதித்து வெற்றி மகுடம் சூடி, அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

136-வது வார்டில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் அறிவுசெல்வி தோல்வியை தழுவினாலும், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட அரசியல் கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி 2-ம் இடத்தை பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

102 பெண்கள்

334 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனையாக, சென்னையில் 102 வார்டுகளில் பெண்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

ஆண்களைவிட அதிக இடங்களில் வென்றும் அசத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்