தமிழக தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் போராட்டம்

மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ள ஓட்டு உள்பட முறைகேடு குறித்து உரிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளிக்கும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி மனு கொடுத்தனர்.;

Update:2022-02-21 05:58 IST
முற்றுகை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவின்போது மாலை 5 மணிக்கு பின்னர் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும், எனவே வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சினேகா மோகன்தாஸ், வக்கீல் அணி மாநில இணை செயலாளர் ஸ்ரீதர் உள்பட நிர்வாகிகள் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு நேற்று புகார் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

மாநில தேர்தல் கமிஷனரை சந்திப்பதற்கு, மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கண்ணில் கருப்பு துணி கட்டி மக்கள் நீதி மய்யத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள், தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் கமிஷனரிடம் மனு

போராட்டத்தை தொடர்ந்து, செந்தில் ஆறுமுகம், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் உள்பட சில நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமாரை சந்தித்து 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கொடுத்தனர்.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்

அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

* கள்ள ஓட்டு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்தான உரிய விளக்கத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.

* சென்னையில் வார்டு எண் 173-ல் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை வாக்குச்சாவடிக்குள் வர அனுமதிக்காமல், அப்பட்டமான விதிமீறல் செய்து கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் செயல்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* வாக்குப்பதிவு நாளன்று (பிப்ரவரி 19-ந்தேதி) மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் வாக்குப்பதிவு செய்தவர்களின் விவரங்களை (கையெழுத்து ரெஜிஸ்டர், சி.சி.டி.வி. காட்சிகள்) வேட்பாளர்களிடம் காண்பிக்கவேண்டும்.

* வாக்குப்பதிவு செய்த கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விவரங்களை ‘பூத்' வாரியாக வெளியிடவேண்டும்.

* தமிழகமெங்கும் நடைபெற்ற ஓட்டுக்கு பணம், பரிசு பொருள் உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது முறைகேடுகள் நடக்காமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுக்கவேண்டும்.

* கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படாதபட்சத்தில் நடைபெற்ற தேர்தலை ரத்துசெய்து மறுதேர்தல் நடத்தப்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்